தோழர்.அசோகராஜன்
பணி ஓய்வு
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்.லில் டெலிகாம் டெக்னிசியாகப் பணிபுரியும்
தோழர்.அசோகராஜன் வருகின்ற 31.08.2017 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவர் குறித்த நினைவலைகள்
:
தோழர்.அசோகராஜன் கடலூரில் பிறந்தார். தோழர்.அசோகராஜனின் தந்தையார்
திரு.கிருஷ்ணன். கடலூர் மேட்டுப்பாளையத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தார். தோழர்.அசோகராஜனுக்கு
2-1/2 வயதாக இருக்கும் போதே அவர் தந்தையார் காலமாகி விட்டார். தோழர். அசோகராஜனின் தாயார்.கிருஷ்ணவேணி
அவர்களும் ஆசிரியர் ஆவார். இவர் கடலூர் நகரம் வன்னியர்பாளையம் முனிசிபல் நடுநிலைப்பள்ளியில்
ஆசிரியராக பணி புரிந்து வந்தார். தனது கணவர் காலமாகி விட்டதையடுத்து தனது மகன் அசோகராஜன்
கவனித்து வளர்த்தார். அசோகராஜனின் பெற்றோர் திருமணம் காதல் திருமணமாகும்.
தோழர்.அசோகராஜன் எட்டாம் வகுப்பு வரையிலான தனது கல்வியினை கடலூர்
செயிண்ட் மேரீஸ் பள்ளியில் படித்து முடித்தார். எட்டாம் வகுப்பு முதல் பதினொன்றாம்
வகுப்பு (பழைய முறை) சென்னை திருவேற்காட்டிலுள்ள எஸ்.கே.டி.ஏ உயர்நிலைப்பள்ளியில் படித்து
முடித்தார். பி.யூ.சி கல்லூரிப் படிப்பினை அரசு கலைக்கல்லூரி, கடலூரியில் படித்து முடித்தார்.
தற்காலிக மஸ்தூராக தொலைபேசித் துறையில் 10.10.1976 அன்று கால் பதித்தார்.
கடலூரிலிருந்து பிரிக்கப்பட்டு அன்று தான் புதுச்சேரி தொலைபேசி டிவிஷன் தோன்றியிருந்தது.
1977-யில் மஸ்தூர் சங்கத்தின் பொருளாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1980-ல் புதுச்சேரி
பெருமாள் கோவில் தெருவில் அமைந்திருந்த தொலைபேசி அலுவலகத்தின் மிக மோசமான நிலையைக்
கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார். மாநிலச் செயலர்
தோழர்.ஜெகன், அப்போதைய கோட்டச் செயலர் தோழர்.தமிழ்மணி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் தோழர்களின்
தொடர்ச்சியான போராட்டத்தின் காரணமாக 25 நாட்களுக்கு பின் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.
ஜூலை 1980ல் மஸ்தூர் பணியில் நிரந்தரமாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து
நிர்வாகத்தின் பழி வாங்கும் போக்கு காராணமாக காரைக்காலுக்கு மாற்றப்பட்டார். மீண்டும்
தோழர்.அசோகராஜனுக்கு ஆதரவாகவும் மாற்றலை ரத்து செய்யக் கோரியும் போராட்டம் வெடித்தது.
நிர்வாகம் பணிந்தது. மீண்டும் புதுச்சேரி மாற்றப்பட்டார்.
1982-ல் கிளைச் செயலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ல் அப்போதைய
மத்திய அமைச்சர் திரு.ஸ்டீபன் அவர்கள் அலுவலக வளாகத்தில் கூட்டம் நடத்தக் கூடாது என்று
சொல்லி போட்ட உத்திரவை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக இரண்டு இங்க்ரிமெண்ட்
கட் மற்றும் FR-17 A வழங்கப்பட்டது. எனவே இவரால் இலாக்கா தேர்வு எழுத முடியவில்லை.
பணி நிரந்தரம் அவதும் பத்து ஆண்டுகள் தள்ளிப் போனது. 1988 கோட்டச் செயலாரானார்.
1986ல் கேசுவல் ஊழியர் நிரந்தரம், RTP நிரந்தரம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டமைக்காக
மீண்டும் FR-17A வழங்கப்பட்டது.
1990-ல் நடைபெற்ற போராட்டத்தில் மிகத் தீவிரமாக பங்கேற்றார். இப்போராட்டத்தில்
காரணமாக மஸ்தூர்கள் நிரந்தரம் செய்யப்பட்டார்கள். மஸ்தூர்களுக்கு போனஸ் பெற்றுத் தந்தது
இந்த போராட்டமே. இப்போராட்டம் நடைபெற்ற போது புதுச்சேரி முனிசிபலாட்டி நிர்வாகம் ரெட்டியார்பாளையத்தில்
உள்ள தொலைபேசி ஊழியர்கள் குடியிருப்பு முன்பு குப்பையை கொண்டு வந்து கொட்டியது. இந்த
அநீதியைக் கண்டு வெகுண்டெழுந்த ஊழியர்கள் பதிலுக்கு குப்பையை அள்ளிக் கொண்டு போய் முனிசிபல்
கமிஷனர் வீட்டு முன்பு கொட்டினார்கள். காவல் துறை வழக்கு பதிவு செய்தது. தோழர்.அசோகராஜன்,
மற்றும் தோழர்கள். அபிமன்யூ, சின்னத்துரை, பிரபாகரன் (FNPTO), சக்திவேல் (FNPTO), பிச்சுமணி,
கே.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டத்து. இவ்வழக்கில் தோழர்.அசோகராஜன்
முதல் குற்றவாளியாக காட்டப்பட்டார். எனவே புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த
வழக்கு ஒவ்வொரு முறை விசாரணைக்கு அழைக்கப்படும் போது தோழர்.அசோகராஜன் வகையறா என்றே
அழைக்கப்பட்டனர். இந்த வழக்கு ஜாமீனில் வர முடியாத வழக்காகவே பதிவு செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர்.விஸ்வநாதன் அவர்களின் தலையீட்டின்
பெயரில் இது ஜாமீனில் வெளிவரக் கூடிய வழக்காக மாற்றப்பட்டது. 1996-ல் போன்மெக்கானிக்காக
பணி உயர்வு பெற்றார்.
பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். தோழர்.அசோகராஜன் எம்.ஜி.ஆர்
ரசிகர். NFPTE சங்கத்தின் போராட்ட குணம், தோழர்.தமிழ்மணி உள்ளிட்ட தலைவர்களின் பேச்சாற்றல்
இவரை இடதுசாரி சிந்தனை கொண்டவராக மாற்றியது. 1991 முதல் NFTE மாநிலச் சங்கத்தில் பல்வேறு
பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார். NFTE தமிழ் மாநிலச் சங்கத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்
என்ற பெருமைக்குரியவர்.
தோழர்.அசோகராஜனின் துணைவியார் திருமதி.கண்ணகி ஆவார். கணவரின்
போராட்ட குணம், தொழிற்சங்க பணிகள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டமையால் அனுசரித்து
குடும்பத்தை திறம்பட நிர்வகித்தார். இவர் தனது கணவரின் பணிக்கு என்றுமே தடையாக இருந்தத்தில்லை.
தோழர்.அசோகராஜனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும்
B.Tech படித்து முடித்துள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
தோழர்.அசோகராஜனின் பணி ஓய்வுக் காலம் சிறப்பாக அமைய வேண்டும். குறிப்பாக
சமூக அக்கறையுள்ள பணிகளில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே நமது ஆசை.
-லெனின்பாரதி, புதுச்சேரி-
No comments:
Post a Comment