Thursday 28 September 2017

திரு.இரா.இராஜேந்திரன் - பி.எஸ்.என்.எல் புதுச்சேரி பணி ஓய்வு

அன்பு நண்பர் திரு.இரா.இராஜேந்திரன் – பி.எஸ்.என்.எல் புதுச்சேரி பணி ஓய்வு.
      என் அன்பிற்கினிய நண்பர் திரு.இரா.இராஜேந்திரன் (பி.எஸ்.என்.எல்-புதுச்சேரி) வருகிற 30.09.2017 அன்று பணி ஓய்வு பெறுகிறார்.
      இவரது தந்தையார் திரு.இராமசாமி சீர்காழி தாலுக்காவில் உள்ள திருவெண்காட்டில் விவசாயம் செய்து வந்தார். இவரது தாயார் திருமதி.ஜெகதம்.
      திரு.இரா.இராஜேந்திரன், நாகை மாவட்டம், சீர்காழி தாலூக்கா, திருவெண்காட்டில் 18.09.1957-ல் பிறந்தார். இவரது தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி திருவெண்காட்டில் கடந்தது. பின்னர் (பூம்புகார்) மேலையூரில் அமைந்துள்ள பூம்புகார் பேரவைக் கல்லூரியில் பி.யூ.சி. மற்றும் பி.ஏ (தத்துவம்) படித்து முடித்தார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (தத்துவம்) பயின்றார். அதன் பின்னர் இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையில் 11.01.1983 அன்று பணியில் சேர்ந்தார்.
      இவருக்கு இரண்டு பெண்கள். மூத்தவர் செல்வி.சங்கீதா பி.டெக் படித்து விட்டு இன்போசிஸில் சென்னையில் பணி புரிகிறார். இளைய மகள் செல்வி.ஷீலாப்ரியா பி.டெக் படித்து விட்டு பெங்களூரிலுள்ள டெக்மஹிந்திராவில் பணி புரிகிறார். இவர் மொத்தம் 34 ஆண்டுகள் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றியுள்ளார். கொடுக்கப்பட்ட பணியினை செய்து முடிக்கும் வரையில் ஓய மாட்டார்.
      திரு.இரா.இரஜேந்திரன் அவர்களின் துணைவியார் திருமதி.கனிவதனா புதுச்சேரி அரசின் டைரக்டரேட் ஆப் அக்கவுண்ட்ஸ் அண்ட் ட்ரசரீஸ்-யில் அஸிஸ்டெண்ட்டாக பணி புரிந்து வருகிறார்.

      பலதருணங்களில் நிலைமை அறிந்து உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர். இவரது பணி ஓய்வுக் காலம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்.








 

Friday 25 August 2017

கடலூரில் தோழர்.இராமன் குட்டியின் உரை

தோழர்.இராமன்குட்டி (அகில இந்தியத் தலைவர் – ALL INDIA BSNL PENSIONERS WELFARE ASSOCIATION ) : கடலூரில் 23.07.2017 அன்று நடைபெற்ற BSNL பென்ஷனர் கூட்டத்தில் பேசியதிலிருந்து :
      “ நல்ல விதை போட்டால் நல்ல பலன் கிடைக்கும். இன்று அகில இந்திய அளவில் ALL INDIA BSNL PERSIONERS WELFARE ASSOCIATION-க்கு 72,000 உறுப்பினர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 2,000 உறுப்பினர்களும் எஞ்சிய தமிழகத்தில் 6,000 உறுப்பினர்களும் உள்ளனர். 20.08.2009 அன்று தொடங்கப்பட்ட இச்சங்கத்தில் இன்று இந்தியா முழுமையாக 300 செகண்டிரி ஸ்விட்சிங்க் ஏரியாவில் (SSA) கிளைகள் உள்ளன”
      “இன்று பொதுத் துறையில் பென்ஷன் மாற்றியமைப்பது என்பது கிடையாது. நம்முடைய துறையிலிருந்த பல முன்னணித் தலைவர்கள் கூட இது எப்படி சாத்தியம் என்று கேள்வி கேட்டனர். ஆனால் இன்று ஊழியர்களின் ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும் போது பென்ஷ்னர்களின் பென்ஷன் மாற்றமும் சாத்தியமே என்று சாதித்துக் காட்டியிருக்கிறோம். செய்ய முடியாது என்று சொன்னதை இன்று சாதித்துக் காட்டியிருக்கிறோம். ஆனால் 168 பொதுத்துறை நிறுவனங்களில் பணி ஆற்றிவிட்டு பணி ஓய்வு பெறும் போது என்ன பென்ஷன் பெறுகிறார்களோ அதைத் தான் இறுதி வரை பெறுகிறார்கள்.”
“பென்ஷனை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசின் உத்திரவு எதுவும் இல்லை. 2006க்கு முன்பு 33 ஆண்டு காலம் பணி முடித்திருந்தால் மட்டுமே முழு பென்ஷன் கிடைக்கும்.  நாம் கடுமையாகப் போராடி இதை மாற்றியமைத்திருக்கிறோம்.”
“முன்னாள் ராணுவத்தினை சிவிலியன் பணி முடித்த பின்பு இரண்டு பேமிலி பென்ஷன் கிடைக்கும். ஆனால் அவர் மறைந்து விட்டால் அவர் மனைவிக்கு ஒரு பென்ஷன் தான் கிடைக்கும். இது பாராபட்சமானது என்று சொல்லி கடுமையாகப் போராடினோம். அதன் பயனாக இன்று முன்னாள் ராணுவத்தினரின் மனைவிக்கு அவர் கணவர் ராணுவத்தில் பணியாற்றியதற்கான பென்ஷன் மற்றும் சிவிலியன் ஆக பணியாற்றியதற்கான் பென்ஷன் என்று இரண்டு பென்ஷன் கிடைக்கும் ஒரு உன்னத உத்திரவினைப் பெற்று நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்”
      “குருவாயூர் கோவிலுக்கு அருகாமையில் உள்ள ஒரு வீட்டில் மூன்று பெண்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மூன்று பேருமே 65 வயதைக் கடந்தவர்களர். மூன்று பேருமே கல்யாணம் ஆகாதவர்கள். அவர்கள் சாப்பாட்டிற்கே திண்டாடி வருகிறார்கள். குடியிருக்கும் வீடு மட்டும் சொந்தமானது. கோவில் அன்னதானம் வழங்கப்படும் போது பாத்திரத்தை எடுத்துச் சென்று அன்னதானத்தைப் பெற்று வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தந்தையார் தொலைபேசி இலாக்காவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பென்ஷன் பெற்று வந்தார். அவர் காலமான பின்பு அவர் துணைவியார் குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தார். அதன் மூலம் அந்த குடும்பம் வாழ்ந்தது. துணைவியாரும் காலமாகி விட்டதைத் தொடர்ந்து மூன்று பெண்களின் வாழ்க்கை இருண்டு போனது. அரசு ஊழியரும் அவர் துணைவியாரும் காலமாகி விட்டால் அவர்களுக்கு கல்யாணம் ஆகாத குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு குடும்ப பென்ஷன் உண்டு என்கிற உத்திரவினைக் கண்டுபிடித்து அந்த பெண்களிடமிருந்து மனுவினைப் பெற்று கடுமையாகப் போராடி இன்று அந்தப் பெண்களுக்கு குடும்பப் பென்ஷனைப் பெற்றுத் தந்திருக்கிறோம். அவர்கள் மகிழ்ச்சியுடன் கடிதம் போட்டிருக்கிறார்கள். சில பிரச்சினைகளின் பலன் எனக்கு கிடைக்காமல் போகலாம். என் மனைவிக்குக் கூட கிடைக்காமல் போகலாம். ஆனால் வருங்கால சந்ததிக்காக போராட வேண்டும்.”
“கோயமுத்தூரில் 94 வயதான ஒரு பென்ஷனர் இருக்கிறார். அவர் பென்ஷன் புத்தகம் ஏடு ஏடாக கிழிந்து விட்டது. அவர் கஷ்டப்பட்டு டேப் போட்டு ஒட்டி வைத்திருக்கிறார். அவரைப் பார்த்தோம். பின்னர் அவர் பணி குறித்த பதிவேடுகள் எதுவும் இல்லாத நிலையிலும் பிரச்சினையின் தன்மையினை எடுத்துக் கூறி அவரிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் அவர் பென்ஷனை மாற்றியமைப்பதற்கான உத்திரவினைப் பெற்றுத் தந்துள்ளோம்.”

“என் மனைவி என்னிடம் போன் செய்து இன்று என்ன தேதி என்று கேட்டாள். 23 என்று சொன்னேன். என்ன மாதம் என்று கேட்டாள். ஆகஸ்ட் என்று சொன்னேன். இன்று என்ன விஷேஷம் என்று கேட்டாள். ஓய்வூதியர்கள் சங்க தொடக்க நாள் என்று சொன்னேன். கடுமையாக என்னை திட்டிய என் மனைவி என்னிடம் சொன்னாள் “இன்று நம் திருமண நாள்”” உண்மையான தலைவர்களின் ஈடுஇணையற்ற வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.



பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள்

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் (சிகிச்சை செலவை சிகிச்சைக்குப்பின் பில் தாக்கல் செய்து இலகாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்)


Thursday 24 August 2017

தோழர்.அசோகராஜன் புதுச்சேரி பணி ஓய்வு 31.08.2017 - வாழ்க்கைக் குறிப்பு







தோழர்.அசோகராஜன் பணி ஓய்வு
       புதுச்சேரி பி.எஸ்.என்.எல்.லில் டெலிகாம் டெக்னிசியாகப் பணிபுரியும் தோழர்.அசோகராஜன் வருகின்ற 31.08.2017 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவர் குறித்த நினைவலைகள் :
       தோழர்.அசோகராஜன் கடலூரில் பிறந்தார். தோழர்.அசோகராஜனின் தந்தையார் திரு.கிருஷ்ணன். கடலூர் மேட்டுப்பாளையத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தார். தோழர்.அசோகராஜனுக்கு 2-1/2 வயதாக இருக்கும் போதே அவர் தந்தையார் காலமாகி விட்டார். தோழர். அசோகராஜனின் தாயார்.கிருஷ்ணவேணி அவர்களும் ஆசிரியர் ஆவார். இவர் கடலூர் நகரம் வன்னியர்பாளையம் முனிசிபல் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். தனது கணவர் காலமாகி விட்டதையடுத்து தனது மகன் அசோகராஜன் கவனித்து வளர்த்தார். அசோகராஜனின் பெற்றோர் திருமணம் காதல் திருமணமாகும்.
       தோழர்.அசோகராஜன் எட்டாம் வகுப்பு வரையிலான தனது கல்வியினை கடலூர் செயிண்ட் மேரீஸ் பள்ளியில் படித்து முடித்தார். எட்டாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு (பழைய முறை) சென்னை திருவேற்காட்டிலுள்ள எஸ்.கே.டி.ஏ உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்தார். பி.யூ.சி கல்லூரிப் படிப்பினை அரசு கலைக்கல்லூரி, கடலூரியில் படித்து முடித்தார்.
       தற்காலிக மஸ்தூராக தொலைபேசித் துறையில் 10.10.1976 அன்று கால் பதித்தார். கடலூரிலிருந்து பிரிக்கப்பட்டு அன்று தான் புதுச்சேரி தொலைபேசி டிவிஷன் தோன்றியிருந்தது. 1977-யில் மஸ்தூர் சங்கத்தின் பொருளாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1980-ல் புதுச்சேரி பெருமாள் கோவில் தெருவில் அமைந்திருந்த தொலைபேசி அலுவலகத்தின் மிக மோசமான நிலையைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார். மாநிலச் செயலர் தோழர்.ஜெகன், அப்போதைய கோட்டச் செயலர் தோழர்.தமிழ்மணி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் தோழர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் காரணமாக 25 நாட்களுக்கு பின் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.
       ஜூலை 1980ல் மஸ்தூர் பணியில் நிரந்தரமாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நிர்வாகத்தின் பழி வாங்கும் போக்கு காராணமாக காரைக்காலுக்கு மாற்றப்பட்டார். மீண்டும் தோழர்.அசோகராஜனுக்கு ஆதரவாகவும் மாற்றலை ரத்து செய்யக் கோரியும் போராட்டம் வெடித்தது. நிர்வாகம் பணிந்தது. மீண்டும் புதுச்சேரி மாற்றப்பட்டார்.
       1982-ல் கிளைச் செயலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ல் அப்போதைய மத்திய அமைச்சர் திரு.ஸ்டீபன் அவர்கள் அலுவலக வளாகத்தில் கூட்டம் நடத்தக் கூடாது என்று சொல்லி போட்ட உத்திரவை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக இரண்டு இங்க்ரிமெண்ட் கட் மற்றும் FR-17 A வழங்கப்பட்டது. எனவே இவரால் இலாக்கா தேர்வு எழுத முடியவில்லை. பணி நிரந்தரம் அவதும் பத்து ஆண்டுகள் தள்ளிப் போனது. 1988 கோட்டச் செயலாரானார். 1986ல் கேசுவல் ஊழியர் நிரந்தரம், RTP நிரந்தரம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டமைக்காக மீண்டும் FR-17A வழங்கப்பட்டது.
       1990-ல் நடைபெற்ற போராட்டத்தில் மிகத் தீவிரமாக பங்கேற்றார். இப்போராட்டத்தில் காரணமாக மஸ்தூர்கள் நிரந்தரம் செய்யப்பட்டார்கள். மஸ்தூர்களுக்கு போனஸ் பெற்றுத் தந்தது இந்த போராட்டமே. இப்போராட்டம் நடைபெற்ற போது புதுச்சேரி முனிசிபலாட்டி நிர்வாகம் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தொலைபேசி ஊழியர்கள் குடியிருப்பு முன்பு குப்பையை கொண்டு வந்து கொட்டியது. இந்த அநீதியைக் கண்டு வெகுண்டெழுந்த ஊழியர்கள் பதிலுக்கு குப்பையை அள்ளிக் கொண்டு போய் முனிசிபல் கமிஷனர் வீட்டு முன்பு கொட்டினார்கள். காவல் துறை வழக்கு பதிவு செய்தது. தோழர்.அசோகராஜன், மற்றும் தோழர்கள். அபிமன்யூ, சின்னத்துரை, பிரபாகரன் (FNPTO), சக்திவேல் (FNPTO), பிச்சுமணி, கே.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டத்து. இவ்வழக்கில் தோழர்.அசோகராஜன் முதல் குற்றவாளியாக காட்டப்பட்டார். எனவே புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு ஒவ்வொரு முறை விசாரணைக்கு அழைக்கப்படும் போது தோழர்.அசோகராஜன் வகையறா என்றே அழைக்கப்பட்டனர். இந்த வழக்கு ஜாமீனில் வர முடியாத வழக்காகவே பதிவு செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர்.விஸ்வநாதன் அவர்களின் தலையீட்டின் பெயரில் இது ஜாமீனில் வெளிவரக் கூடிய வழக்காக மாற்றப்பட்டது. 1996-ல் போன்மெக்கானிக்காக பணி உயர்வு பெற்றார்.
       பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். தோழர்.அசோகராஜன் எம்.ஜி.ஆர் ரசிகர். NFPTE சங்கத்தின் போராட்ட குணம், தோழர்.தமிழ்மணி உள்ளிட்ட தலைவர்களின் பேச்சாற்றல் இவரை இடதுசாரி சிந்தனை கொண்டவராக மாற்றியது. 1991 முதல் NFTE மாநிலச் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார். NFTE தமிழ் மாநிலச் சங்கத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.
             தோழர்.அசோகராஜனின் துணைவியார் திருமதி.கண்ணகி ஆவார். கணவரின் போராட்ட குணம், தொழிற்சங்க பணிகள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டமையால் அனுசரித்து குடும்பத்தை திறம்பட நிர்வகித்தார். இவர் தனது கணவரின் பணிக்கு என்றுமே தடையாக இருந்தத்தில்லை.
       தோழர்.அசோகராஜனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் B.Tech படித்து முடித்துள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
       தோழர்.அசோகராஜனின் பணி ஓய்வுக் காலம் சிறப்பாக அமைய வேண்டும். குறிப்பாக சமூக அக்கறையுள்ள பணிகளில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே நமது ஆசை.

                    -லெனின்பாரதி, புதுச்சேரி-

ALL INDIA BSNL PENSIONERS WELFARE ASSOCIATION 23.08.2017 MEETING PHOTOS TWO

கடலூரில் 23.08.2017 அன்று நடைபெற்ற அகில இந்திய பி.எஸ்.என்.எல் பென்ஷந்தாரர் சேமநல அமைப்பின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
தொடர்ச்சி












கடலூர் AIBSNLPWA 23.08.2017 கூட்ட புகைப்படங்கள் - ஒன்று

கடலூரில் 23.08.2017 அன்று நடைபெற்ற அகில இந்திய பி.எஸ்.என்.எல் பென்ஷந்தாரர் சேமநல அமைப்பின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் :