Monday 31 July 2017

தோழர்.எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராஜேந்திரன் பணி ஓய்வு

தோழர்.எம்.ஜி.ராஜேந்திரன் பணி ஓய்வு
      எம்.ஜி.ஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட தோழர்.எம்.ஜி.ராஜேந்திரன் இன்று 31.07.2017 பி.எஸ்.என்.எல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
      தோழர்.எம்.ஜி.ஆர். 30.07.1957-ல் வந்தவாசியில் பிறந்தார். இவரது தந்தையார் திரு.எம்.கங்கையா நாயுடு தாயார் முனியம்மாள்.. இவரது தந்தையார் ஒரு விவசாயி. தோழர்.எம்.ஜி.ராஜேந்திரன் தொடக்கக் கல்வி வந்தவாசி அருகிலுள்ள அரசூரில் அமைந்திருந்தது. பின்னர் 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கள்ளக்குறிச்சியிலுள்ள தனது அக்கா வீட்டில் தங்கிப் படித்தார். 1980 முதல் பி.எஸ்.என்.எல்-லில் பணி புரிகிறார். தொடக்க காலத்தில் தொலைத் தொடர்புத் துறையில் மஸ்தூராக பணியாற்றிய போது காட்டிலும், மேட்டிலும் வெயிலிலும், மழையிலும் கடுமையாகப் பணியாற்றியிருக்கிறார். தற்போதும் இவரது சேவை பெரிதும் சக ஊழியர்களாலும், அதிகாரிகளும் பெருமளவுக்கு மதிக்கப்பட்டும் புகழப்பட்டும் வருகிறது.
      இவருக்கு ஒரு மகள். ஒரு மகன். மகள் பி.எஸ்.சி நர்சிங் படித்து முடித்து விட்டாள். உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறாள். தனது மகளின் சிறுநீரகம் இரண்டு செயலிழந்து போய் அவருக்கு தங்களது சிறுநீரகத்தை உறவினர்கள் பலர் தானமாக கொடுக்க முன் வந்தனர். எனினும் எதுவும் பொருந்தவில்லை. இறுதியில் தோழர்.எம்.ஜி.ராஜேந்திரன் அவர்களின் சிறுநீரகம் பொருந்தி வந்த நிலையில் தனது மகளுக்கு தனது சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்தார். தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.
      இவரது மகன் வில்லியனூர் இந்தியன் வங்கியில் உதவி மேலாளராக உள்ளார். தொழிற்சங்கத்தின் மீது அபரிதமான பற்று கொண்டவர். சங்கம் கட்டளையிட்ட போதெல்லாம் அதை சிரமேற்கொண்டு செயல்படுத்தியவர். முன்னணி வீரர். எனினும் தனக்கு தோன்றிய மாறுபட்ட கருத்துக்களையும் சங்கக் கூட்டங்களில் இவர் அவ்வப்போது வெளிப்படுத்தத் தவறவில்லை. கடந்த 27.07.2017 அன்று பி.எஸ்.என்.எல்-லில் நடைபெற்ற ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டிருக்கிறார். சங்கத்தின் உத்திரவுக்கு இவர் கொடுக்கும் மரியாதை இதிலிருந்தே தெரியும்.
      பணி ஓய்வுக்குப் பின் சமூக சேவையில் ஈடுபட ஆசை என்று கூறியிருக்கிறார்.

      வா தோழா …. நாம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் ஆயிரம் காத்துக்கிடக்கு. உறக்கமின்றி பணியாற்ற வா….









No comments:

Post a Comment